![3 passed away car accident in Walajapet](http://image.nakkheeran.in/cdn/farfuture/nFRw5m7gyZQeSnuD9GDxMMT7pUB4zDxHTY0LgPx4L6c/1685691159/sites/default/files/inline-images/1001_12.jpg)
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திருமால். வேலூர் விரிஞ்சிபுரத்தில் உறவினர் வீட்டில் நடைபெற்ற காரிய நிகழ்வில் பங்கேற்று விட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பியுள்ளார். சரியாக வாலாஜாப்பேட்டை அடுத்த குடிமல்லூர் அருகே மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கிய போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நெடுஞ்சாலை ஓரத்தில் கிரீஸ் அடிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்கானது. இந்த விபத்தில் திருமால், அவரது சகோதரி எழிலரசி மற்றும் ஓட்டுநர் அஜய் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காரிலிருந்த ஒரு சிறுவன் மற்றும் இரு சிறுமிகள் உடலில் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த திருமால் வேலூர் விரிஞ்சிபுரத்தில் உள்ள தனது அக்கா எழிலரசி வீட்டில் கோடை விடுமுறையை கழித்து விட்டு திருமாலின் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பிள்ளைகளான தருண், தரணிகா, தனுஷ்கா, அக்கா எழிலரசி, திருமால் மற்றும் ஓட்டுநர் உட்பட 6 பேர் காரில் சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது வாலாஜா அருகே முன்னே சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.