Skip to main content

ரூபாய் 2000? எடப்பாடியின் பழைய கணக்கு புதுப்பிக்கப்படுமா?

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண ஒரு படி அரிசித் திட்டத்தைச் செயல்படுத்துவேன் என்று 1967- ஆம் ஆண்டில் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார் அண்ணாதுரை. ஆனால், காலம் அவரைக் கொண்டு சென்றதால், அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது. அதேபோல், தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, சிறப்பு உதவித் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப் போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்து 3 மாதங்களாகியும் அந்தத் திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்தவில்லை. ஆனால், இப்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம். விரைவில் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதில்தான் எடப்பாடியின் சாமர்த்தியம் இருக்கிறது. 
 

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான அரசாணை ஏற்கனவே பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்போது, நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு வாக்காளர்களுக்குச் சட்டப்பூர்வமாக பணம் வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.  'சட்டப்பஞ்சாயத்து இயக்கம்' உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கத் தடையில்லை என்று நீதிமன்றம் அறிவித்தது.  அதனால், மார்ச் 4-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் வைத்து, இந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
 

இதற்கிடையே, நிதியுதவி பெறும் பயனாளிகள் தேர்வில் குளறுபடி இருப்பதாக, விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் வழக்கு தொடுத்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை என்று கூறிவிட்டு, தேர்தலை மனதில் கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது’ என்று கூறியிருந்தார். மேலும், ‘9 பேர் கொண்ட குழு  பயனாளிகள் பட்டியலைத் தேர்வு செய்வதாக அரசாணையில் கூறப்பட்டிருக்கிறது. இது முறைகேட்டுக்கு வழி வகுக்கும்’என்று அவர் முறையிட்டிருந்தார்.

 2000 rupees Will cm Edappadi's old account be updated


இந்த வழக்கு, மார்ச்  21-ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி,  “நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது. அதனால், சிறப்பு உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும், பயனாளிகளின் விவரங்களை கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தப்பட்டு விட்டது” என்று கூறினார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
 

பொதுவாக தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது, புதிய திட்டத்தைத்தான் தொடங்க முடியாது, ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தடையில்லை என்பது யதார்த்தம். ஆனால், மார்ச் 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர், "தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், இந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம்" என்றார். நீதிமன்றமும் இதை  ஏற்றுக் கொண்டது.
 

மே 27-ஆம் தேதியோடு தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துவிட்டன. எடப்பாடி பழனிசாமி நினைத்திருந்தால், அன்றே இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்குப் பணம் பட்டுவாடா செய்திருக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அதைப்பற்றி வாயே திறக்காத முதல்வர், கடந்த  15-ஆம் தேதி,  அண்ணா பிறந்தாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் விரைவில் வழங்கப்படும்..” என்றார். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருப்பதால், வீட்டுக்கு ரூ.2 ஆயிரம் தந்து வாக்குகளைக் கவரலாம் என்பது எடப்பாடியின் திட்டமாக இருக்கிறது என்கிறார்கள் அரசுத்துறை வட்டாரத்தில். 
 

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,  ரூ.2000 திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததால், தற்போது நிறுத்தி வைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்சும் திரும்பத் திரும்பச்  சொன்னார்கள். தேர்தல் முடிந்ததும் கண்டிப்பாக ரூ.2 ஆயிரம் கொடுப்போம் என்றும் உறுதியளித்தார்கள். இந்த முறையாவது பணம் கொடுப்பார்களா? அல்லது, அதேபோல் ஏதாவது சொல்லி மக்களை ஏமாற்றி விடுவார்களா? எடப்பாடிக்கே வெளிச்சம்!




 

சார்ந்த செய்திகள்