![200 green houses have been obtained illegally in the ADMK regime!](http://image.nakkheeran.in/cdn/farfuture/iiwS1ryrgisQMyutyhYr59hBlHAFxBzBsxdBUxyeaGM/1676367880/sites/default/files/inline-images/th_3678.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் அறிஞர் அண்ணா நெசவாளர் கூட்டுறவு சங்கம், காந்திஜி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் அமரர் சஞ்சய் காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம், சித்தையன்கோட்டை, கமலா நேரு, ம.பொ.சி. சிலம்புச்செல்வர் நெசவாளர் கூட்டுறவு சங்கம், நம்நாடு, அஞ்சுகம் நெசவாளர் கூட்டுறவு சங்கம் உட்பட 8 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கடந்த 2013ம் வருடம் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தின் போது கைத்தறி நெசவாளர்களுக்காக பசுமை வீடுகள் 2013-14ம் ஆண்டு தமிழக முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் மூலம் (நெசவாளர்) 200 வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இதில் பலருக்கு முறைகேடாகப் பசுமை வீடுகள் வழங்கப்பட்டது. பசுமை வீடுகளில் 190 வீடுகள் சீவல் சரகு ஊராட்சியிலும், 10 வீடுகள் அம்பாத்துரை ஊராட்சி பகுதியிலும் கட்டப்பட்டன. வீடு கட்டுவதற்கு தமிழக அரசின் சார்பாக ரூ.2லட்சத்து 60ஆயிரம் நிதி உதவி(மானியம்) வழங்கப்பட்டது. இதன் மூலம் 200 பேர் பசுமை வீடுகளைப் பெற்று வீடுகளைக் கட்டினார்கள். இதில் முறைகேடாக கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அலுவலர்கள், இயக்குநர்கள் வீடுகளைப் பெற்று கட்டி வாடகைக்கு விடுவதோடு நல்ல இலாபத்துடன் விற்றும் வருகின்றனர். மேலும் வீடுகள் இல்லாத கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை அதிமுக ஆட்சியில் வருமான வரி கட்டுபவர்களும் முறைகேடாக பசுமை வீடுகளைப் பெற்று அதை இலாபத்துடன் விற்றும் உள்ளனர்.
நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த இயக்குநர்கள் சிலர் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கைத்தறி நெசவாளர்கள் கூறுகின்றனர். வீடு இல்லாத ஏழை நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய பசுமை வீடுகளை முறைகேடாக பெற்று வணிக நோக்கத்தில் வீடுகட்டி விற்று வருவது வேதனை அளிப்பதாக கைத்தறி நெசவாளர்கள் புலம்புகின்றனர். இனிமேல் தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகளை ஒதுக்கும் போது முறைப்படி வீடு இல்லாத ஏழை நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.