டீசல் விலை ஏற்றத்தால், சரக்கு புக்கிங் செய்யாமல் தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக லாரி உரிமயாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறுகையில், ''மத்திய அரசு டீசல் விலையை தினமும் உயர்த்தி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஒரு லிட்டர் டீசல் 84.60 ரூபாயாக உள்ளது. விரைவில் 100 ரூபாயை தொட்டாலும் ஆச்சரியமில்லை. இந்த விலை உயர்வு லாரி உரிமையாளர்களுக்குக் கடும் வேதனையை அளிக்கிறது.
நாள்தோறும் டீசல் விலை உயர்ந்து வருவதால், சரக்குகளுக்கு நிலையான வாடகையை எங்களால் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. அப்படியே சரக்கு புக்கிங் ஆனாலும், அதன்மூலம் கிடைக்கும் வாடகை வருமானம் டீசல் செலவுக்கே சரியாக விடுகிறது. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, இன்றைய நிலையில் மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் லாரிகளை சரக்கு புக்கிங் செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கிறோம். இதன்மூலம் வருமானம் இல்லாவிட்டாலும் கூட, நட்டத்தில் இருந்து தற்காத்துக்கொள்கிறோம். இதே நிலை தொடர்ந்தால், லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையைக் குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.