சிதம்பரம் அருகே உள்ள பொன்னேரி பகுதியில் இருந்து அக்கரைக்கு செல்ல நடைபாலம் இல்லாததால் பொன்னேரியில் ஆபத்தான நிலையில் நீந்தியபடி கிராம மக்கள் கூலிவேலைக்கும், விவசாய வேலைக்கும் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு ஊராட்சியில் உள்ளது பொன்னேரிக்கரை கிராமம். இந்த பகுதியில் உள்ள பொன்னேரி என்ற ஏரியை சரியாக தூர்வாரப்படாததாலும் சில இடங்களில் அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டுள்ளதால் ஏரியின் பல இடங்களில் மேடு பள்ளமாக உள்ளது.
தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொன்னேரியில் தண்ணீர் அதிகமாக உள்ளது. பொன்னேரி அருகே மதுரா துணிசிரமேடு கிராமத்தில் வசித்து வரும் மக்கள் பொன்னேரியின் அக்கரையில் உள்ள பூங்குடி கிராமம் அருகே 300க்கு ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது சம்பா நடவு மற்றும் விவசாய வேலைகள் நடந்து வருவதால் பொன்னேரி கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல நடைபாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆபத்தான நிலையில் தினமும் நீந்தி செல்கின்றனர்.
பல ஆண்டுகளாக அப்பகுதியில் நடைபாலம் ஒன்று அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தினமும் அக்கரைக்கு கிராம மக்கள் நீந்தி செல்கின்றனர்.
அப்படி நீந்தி செல்லும்போது சில இடங்களில் அதிக அளவில் பள்ளம் உள்ளதால் சிலர் தண்ணீரில் மூழ்கி விடுகின்றனர் கடந்த ஆண்டில் பொன்னேரி கரையைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மனைவி பூங்கோதை (60) என்பவர் விவசாய பணிகளுக்காக பொன்னேரியில் நீந்தி செல்லும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு அக்கரைக்கு சென்று மயங்கி விழுந்து இறந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விவசாய வேலைசெய்ய தலையில் கூடை உள்ளிட்ட பொருட்களை எடுத்துகொண்டு நீந்திச் செல்லும் போது ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர் .
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் கூறுகையில், பொன்னேரிக்கரை பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தற்போது விவசாய பணிகள் நடந்து வருவதால் அக்கரையில் உள்ள பூங்குடி கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மூன்று கிலோ மீட்டர் சுற்றி செல்லவேண்டும் இதனால் பொன்னேரிக்கரையிலிருந்து பூங்கொடி கிராமத்தில் உள்ள விளைநிலங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் ஏரியில் இறங்கி ஆபத்தான நிலையில் தினமும் நீந்தி கடந்து வருவதாகும்.
இப்பகுதியில் ஒரு நடைபாலம் அமைத்து தரக்கோரி நீண்ட காலமாக கோரி வருகிறோம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி உள்ளிட்ட பல அதிகாரிகளும் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது பொன்னேரியில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் முதலைகள் ஏராளமாக உள்ளது. மக்கள் உயிரை பணையம் வைத்து தினமும் விவசாய பணிகளுக்காக நீந்தி அக்கரைக்கு செல்லும் அவல நிலையில் உள்ளனர். சிலர் உர மூட்டைகளை கூட தலையில் வைத்துக்கொண்டு அக்கரை செல்கின்றனர். பொன்னேரி இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஒரு நடைபாலம் கட்டி தர வேண்டும் அப்படி இல்லையென்றால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.