சென்னை யானைக்கவுனியில் ஆட்டோவில் வந்த நகைக்கடை உரிமையாளரிடம் போலீஸ் எனக் கூறி ஒரு கும்பல் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுப்பாராவ் என்பவர் அவருடைய மேலாளருடன் இன்று காலை யானைக்கவுனி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், 'ஆந்திராவில் இருந்து தனியார் பேருந்து மூலமாக இன்று சென்னைக்கு வந்தேன். சென்னை வால்டாக்ஸ் சாலையில் இறங்கி ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடன் வீரப்பன் சாலை வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது கார் ஒன்று ஆட்டோவை வழிமறித்து நின்றது. காரில் இருந்து இறங்கிய நபர்கள் ஆட்டோவையும் பையையும் சோதனையிட வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
அவர்கள் நாங்கள் போலீசார் எனத் தெரிவித்ததோடு, உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் செல்கிறீர்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்து சோதனை செய்ய வந்தோம் எனத் தெரிவித்தனர். மேலும், அவர்கள் வந்த காரில் இருந்த காப்பு மற்றும் லத்தியை காட்டினர். இதனால் உண்மையான காவல்துறையினர் என்று நினைத்து சோதிப்பதற்காக பையை கொடுத்தோம். ஆனால், அவர்கள் பையை பெற்றவுடன் தப்பித்து சென்றனர்' எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.