தர்மபுரியில் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட விளையாட்டு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்த வட்டாட்சியர் மாரடைப்பால் இறந்தார்.
தர்மபுரி காந்தி நகரைச் சேர்ந்தவர் அதியமான் (54). இவர் இலங்கை அகதிகள் முகாம் வட்டாட்சியராக பணியாற்றி வந்தார். திங்கட்கிழமை (பிப். 20, 2023) தர்மபுரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் அரசு ஊழியர்களுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் வட்டாட்சியர் அதியமானும் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது திடீரென்று அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறி தரையில் அமர்ந்தார். பின்னர் அப்படியே மயங்கி விழுந்தார். இதனால் பதற்றம் அடைந்த அங்கிருந்த சக ஊழியர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவரை உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவப் பரிசோதனையில் வட்டாட்சியர் அதியமான் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து உடற்கூராய்வுக்காக அவருடைய சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த வட்டாட்சியர் அதியமானுக்கு தங்க மீனாட்சி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி நகர காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வட்டாட்சியர் அதியமான் இறந்த சம்பவம் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.