கோயம்பேட்டில் கடை ஒன்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அயோடின் இல்லாத உப்பு பொட்டலங்களை டன் கணக்கில் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பேசுகையில்,''கோயம்பேடு அங்காடியில் ஒரு குடோன் இருந்தது. அந்த குடோனில் நிறைய உப்புக்கள் விற்பனைக்கு வருகிறது என்று தகவல் வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் இன்னைக்கு அந்த குடோனில் சோதனை செய்தோம். அதில் உப்பு மூட்டைகள் நிறைய வைக்கப்பட்டிருந்தது. கேட்டதற்கு இதை நாங்கள் இண்டஸ்ட்ரியல் பர்பஸ்க்கு பயன்படுத்துகிறோம் அப்படின்னு சொல்றாங்க. ஆனால் சந்தேகத்தின் அடிப்படையில் நாங்கள் இங்கு இருக்கக்கூடிய மூட்டைகள் அனைத்தையும் சீஸ் பண்ணி வைத்துவிட்டு, உப்பை எங்கெல்லாம் சப்ளை செய்திருக்கிறார் என்பதற்கான பில்லை கேட்டிருக்கிறோம். அவர் பில்லை கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இப்போதைக்கு சுமார் 13 டன் உப்பை பறிமுதல் செய்திருக்கிறோம்.
அயோடின் இல்லாத உப்பு இது எனவே இந்த உப்பை சாதாரணமாக மனிதர்கள் உட்கொள்ளக்கூடாது. அயோடின் இல்லாத உப்பை விற்றதற்கான ப்ராப்பர் பில்லையும், விளக்கத்தையும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் உப்பை நாங்கள் மீண்டும் எடுத்துக் கொண்டு போக அனுமதிப்போம். இந்த கடையில் யார் யாரெல்லாம் உப்பு வாங்கி இருக்கிறார்களோ அங்கெல்லாம் போய் விசாரிப்போம். உண்மையிலேயே இந்த உப்பு ட்ரீட்மென்ட்க்கு போகிறதா என்பதை நாங்கள் விசாரணை செய்வோம். இந்த உப்பு எங்கே எங்கே செல்கிறது என்பதை டிரேஸ் பண்ணிடலாம். அயோடின் கலந்த உப்புதான் மனிதர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி சட்டமே இயற்றி இருக்கிறார்கள். ஒரு கிலோ, இரண்டு கிலோ பாக்கெட்டில் தான் உப்பு இருக்க வேண்டும். அதன் மேலேயே அயோடின் உண்டு என போட்டிருக்க வேண்டும். உப்பளங்களில் உப்பு தயாரிக்கப்படும் பொழுது அயோடின் அளவு முப்பது பிபிஎம் இருக்க வேண்டும். (பார்ட்ஸ் பெர் மில்லியன்-PPM) கடைகளுக்கு வரும் பொழுது 15-ல் இருந்து 10 பிபிஎம் அளவு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு இருந்தால் தான் அந்த உப்பு அயோடின் கலந்த தரமான உப்பு என்று நாம் சொல்கிறோம். அயோடின் இல்லாத உப்பை அரசு தடை செய்துள்ளது. அயோடின் கலக்காத உப்புகளை யாராவது வீட்டிற்கு சமைப்பதற்காக வியாபாரம் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.