Skip to main content

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

12th class exam results released
கோப்புபடம்

 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 3,324 மையங்களில் நடந்த இந்த பொதுத்தேர்வை 8.17 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணியில் மொத்தம் 50,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். பின்னர் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தவுடன் மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது. 

 

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் 2 ஆம் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்