தாங்கள் 100 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த உப்பளங்களை விட்டு வெளியேற தொடர் நெருக்கடி கொடுக்கும் அரசினைக் கண்டித்து 150க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் துலுக்கன்குளம் கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் வைப்பாறு ஊராட்சிக்குட்பட்டது துலுக்கன்குளம் கிராமம். ஏறக்குறைய 150 குடியிருப்புக்களை கொண்டு இக்கிராமத்தின் நான்கு தலைமுறைத் தொழில் உப்பளத் தொழிலே.! கிராமத்திலுள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் உப்பளக்கழி அமைத்து சுமார் 100 ஆண்டுகளாக உப்பளத்தொழில் செய்து வரும் இவர்களிடம், " நீங்கள் தொழில் செய்து கொண்டிருக்கும் இடம் அரசிற்கு சொந்தமான டிஸ்பாரஸ்ட் இடம். இந்த நோட்டீஸ் கண்ட 15 நாட்களுக்குள் அவ்விடத்தை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும்.. தவறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்." என கடந்த மாதத்தில் வருவாய்துறை சார்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து துலுக்கன்குளம் கிராம மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தகவல் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் ''ஆண்டாண்டு காலமாக நாங்கள் பயன்படுத்தி வந்த உப்பளங்களை விட்டு உடனடியாக வெளியேற முடியும்..? 150க்கும் மேற்பட்டோர் ஒரு ஏக்கர், அரை ஏக்கர் என அனைவரும் நிலத்தில் உப்பளங்களை பயன்படுத்தி வருகின்றோம். அதுபோக ஏறக்குறைய 35 ஆண்டுகளாக வரியும் செலுத்தி வருகின்றோம். முதலில் நாங்கள் பயன்படுத்தி வந்த நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவேண்டும் என நிலங்களை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயனாளிகளுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும்" எனவும் தெரிவித்து 150க்கும் அதிகமான வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் அவர்கள். தேர்தல் காலம் என்பதால் பரப்பரப்பில் சிக்கியுள்ளது துலுக்கன்குளம்.