இன்று (20-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, தக்கலையில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். இதில், பத்மநாபபுரம் தொகுதியில் திமுக’வின் கூட்டணி வேட்பாளரான மனோதங்கராஜ், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான விஜயதரணி, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ராஜேஷ்குமார், குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான பிரின்ஸ் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜயவசந்த் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, “பத்தாண்டுகாலமாக பாழ்பட்டிருக்கும் ஒரு நிலையைத் தமிழ்நாட்டு மக்களுக்குக் கொண்டுவந்து பல கொடுமைகளை, அக்கிரமங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு ஆட்சிதான் அ.தி.மு.க.வின் ஆட்சி. அப்படிப்பட்ட ஆட்சி நடத்துகிற பழனிசாமி, ஏதோ பத்தாண்டுகளாக திமுகதான் ஆட்சியில் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள் என்று திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறார். பத்தாண்டுகளாக மத்திய ஆட்சியின் கூட்டணியோடு தி.மு.க. பொறுப்பில் இருந்ததே, அப்போது என்ன செய்தது என்று தொடர்ந்து பழனிசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வியை அவரைப் பார்த்து நான் கேட்கிறேன். நீங்கள் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்களே, என்ன செய்துள்ளீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள். இந்த கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? மேலும் அவருடைய துறை நெடுஞ்சாலைத் துறை. அந்த துறையில் கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர் அவருடைய சம்பந்திக்கு - சம்பந்தியின் சம்பந்திக்கு விடப்பட்டிருக்கிறது. இதை ஆதாரத்தோடு நம்முடைய திமுக வழக்கறிஞர் - மாநிலங்களவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர் பாரதி கண்டுபிடித்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இப்படி டெண்டர் பெற்றவர்கள் பழனிசாமிக்கு என்ன உறவு? என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பி இருக்கிறது. இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்? உலக வங்கி நிதியில் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கக் கூடாது என்ற விதியே இருக்கிறது. அந்த விதியை மீறி அவர் கொடுத்திருக்கிறார். அப்படிக் கொடுத்த நேரத்தில் ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை இதை விசாரிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கேட்டிருக்கிறார்கள். இதற்கு முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகிறார்? 4,000 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு நடந்திருக்கிறது.
இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதா இல்லையா? இதற்குப் பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்? தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், திட்டங்களை நிறைவேற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும் முதலமைச்சராக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்து நாட்டுக்கு அடையாளம் காட்டுவது நம்முடைய கடமை என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால் ஜெயலலிதா, ஜெயலலிதா என்று நடித்துக் கொண்டிருப்பவர்கள் ஜெயலலிதா லட்சியத்தைக் காப்பாற்றி விட்டார்களா? என்று பேசியுள்ளார்.