கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்குத் தொடர் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நிரம்பும் கட்டத்தை நோக்கி வருகிறது.முன்னதாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.51 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது நீர்வரத்து 1 லட்சம் கன அடியாகக்குறைந்துள்ளது. இதனால் 118 அடியைக் கடந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை நெருங்கி வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து 20,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 934 கன அடி இருந்து ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இன்று இரவுக்குள் அல்லது நாளை காலைக்குள்ளாக மேட்டூர் அணை 120 அடியை எட்டினால் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.