![10th class student passed away in accident](http://image.nakkheeran.in/cdn/farfuture/gggaTxefnZSsj_n2KoHpov-TJtpKbGTVaNFIXI3I53Q/1652438104/sites/default/files/inline-images/th_2282.jpg)
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காசி கடைத்தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ஸ்ரீவேதநாயகி (16). இவர் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஸ்ரீவேதநாயகி நேற்று காலை தமிழ் தேர்வு எழுதுவதற்காக அவரது அண்ணன் கரணுடன் ஸ்கூட்டரில் டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டரை கரண் ஓட்ட, பின்னால் ஸ்ரீவேதநாயகி அமர்ந்திருந்தார்.
அதேபோல் நெ.1 டோல்கேட் ஓம்சக்தி நகரை சேர்ந்த தமிழழகன் மகன் பாலச்சந்தர், தனது தங்கையான 11-ம் வகுப்பு மாணவியை மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு டூவீலரில் அழைத்து சென்றார். அப்போது நெ.1 டோல்கேட் அருகே உத்தமர்கோவில் ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது பாலச்சந்தர் ஓட்டி வந்த டூவீலரும், கரண் ஓட்டிவந்த ஸ்கூட்டரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஸ்ரீவேதநாயகிக்கும், கரணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினர். பாலச்சந்தரும், அவரது தங்கையும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். அந்த வழியாக சென்றவர்கள், மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீவேதநாயகி பரிதாபமாக உயிரிழந்தார். கரணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.