![100 years to fulfill the dream of the hill people](http://image.nakkheeran.in/cdn/farfuture/GzvyOTk_e2_hPSO917IVchNgQeU0VwNWuP5K9zAO1NI/1690611773/sites/default/files/inline-images/th-1_4159.jpg)
ஜவ்வாது மலையின் வடக்கு பகுதியில் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் உள்ளது பீஞ்சமந்தை, ஜார்தன்கொள்ளை, பாலாம்பட்டு ஊராட்சிகள். இந்த ஊராட்சிகளில் மொத்தம் 72 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்குச் செல்லவேண்டும் என்றால் மலையடிவாரத்திலுள்ள கீழ்கொத்தூர், முத்துக்குமரன்மலை, பெரியஏரியூர் கிராமங்களைக் கடந்துதான் செல்லவேண்டும். மலையில் உள்ள 33 ஆயிரம் மலைவாழ் மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்கு சுமார் 30 கி.மீ நடந்து அணைக்கட்டு அல்லது ஓடுகத்தூர் பேரூராட்சி பகுதிக்குதான் வரவேண்டும். முத்துக்குமாரன் மலையடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை 8 கி.மீ தூரத்தில் உள்ளது. இவ்வளவு தூரமும் சாலை வசதி கிடையாது. மாற்றுவழிகளான கீழ்கொத்தூர், பெரியஏரியூர் வழியாக செல்லவும் சாலைவசதி கிடையாது.
இந்தியா சுதந்திரம் அடைந்த கடந்த 75 ஆண்டுகளில் எந்த அரசும் சாலைவசதி செய்து தரவில்லை. சுதந்திரத்துக்கு முன்பு எப்படியிருந்ததோ அப்படித்தான் சுதந்திரத்துக்குப் பின்பும் இருந்தது. குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது, மருத்துவ வசதி கிடையாது, தொடக்கப்பள்ளி கிடையாது, பால்வாடி கிடையாது, ரேஷன் கடை கிடையாது, மருத்துவமனை கிடையாது, இப்படி எதுவுமே கிடையாது. இதெல்லாம் செய்ய முடியாததுக்கு காரணம் மலை அடிவாரத்தில் இருந்து இந்த கிராமங்களுக்குச் செல்ல சாலை வசதி கிடையாது.
மலைகிராமப் பெண்ணுக்கு பிரசவம் என்றால் டோலி கட்டி கீழே தூக்கிக்கொண்டு வரவேண்டும், பாம்பு உட்பட விஷ உயிரினங்கள் கடித்துவிட்டு உயிருக்குப் போராடினாலும் டோலிதான் வாகனம். டோலி கட்டி அவர்களை தூக்கி வரும்போது வழியிலேயே பலரும் இறந்துள்ளார்கள். இப்படி கடந்த 50 ஆண்டுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். பள்ளி, கல்லூரிக்குப் போகமுடியாத பிள்ளைகள் ஏராளம்.
சாலை அமைத்துத் தாங்க என மலை மக்கள் கடந்த 100 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தபடியே இருந்தனர். வாக்களிக்கமாட்டோம் எனச் சொன்ன பின்பும், சில நல்ல அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கூட்டணியால் பீஞ்சமந்தை கிராமத்திற்கு பள்ளி, ஆரம்பசுகாதார நிலையம், தபால் நிலையம் வந்தன. இங்கு பணியாற்ற அரசு ஊழியர்கள் முன்வருவதில்லை. சாலை இல்லாததால் போக்குவரத்து வசதி கிடையாது. சாலை இருந்தால்தான் அரசு அதிகாரிகள் வருவார்கள் என்பதால் எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரிகளிடம் ரோடு போட்டுத் தாங்க எனக் கோரிக்கை வைத்தபடியே இருந்தனர்.
வனத்துறை பகுதிக்குச் சாலை அமைப்பது என்பது மிகச் சவாலானது. புதிய சாலைகள் அமைக்க வனத்துறை எங்கும் அனுமதிப்பதில்லை. சாலை அமைத்தால்தானே மலையில் உள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்ய முடியும்? மலை என்பது விலங்கினங்கள் வாழ்வதற்காக, மக்கள் வாழ அல்ல என்பது வனத்துறையின் பதிலாகவே இப்போதும் இருந்து வருகிறது. வனத்துறை பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்றால், பலப்பல விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகளை நிறைவேற்றினால் மட்டுமே சாலை அமைக்க அனுமதி கிடைக்கும்.
கடந்த அதிமுக ஆட்சியில் உங்களுக்குச் சாலை அமைத்துத் தருகிறேன் எனச் சொல்லி தனது காரில் மலையேறிய அப்போதைய அமைச்சர் வீரமணியின் கார் சேற்றில் சிக்கிக்கொண்டு காரை விட்டு இறங்கி மலையேறி மக்கள் குறைகள் கேட்டார். உடனே சாலை அமைத்துத் தருகிறேன் என வாக்குறுதி தந்தார் செய்ய முடியவில்லை.
![100 years to fulfill the dream of the hill people](http://image.nakkheeran.in/cdn/farfuture/JCRNdEQWXJGzAR6cvFbYyVCbfJQwLxNmCsI58nq-1GE/1690611798/sites/default/files/inline-images/th-2_1558.jpg)
2021 திமுக ஆட்சி அமைந்ததும் இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட நந்தகுமார் முயற்சி எடுத்தார். வேலூர் மாவட்டத்துக்கு அரசுமுறைப் பயணமாக வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மலைமக்களின் நிலையை எடுத்துச் சொல்ல சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டன. முதலமைச்சரின் பார்வை பட்டதால் வனத்துறையில் பணிகள் வேகமெடுத்தன.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் புத்தம் புதிய சாலை அமைக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேரடியாக வந்து அந்தச் சாலையைத் திறந்துவைத்தனர். மலைமக்களின் இந்த நூற்றாண்டுக் கனவினை நிறைவேற்றி வைத்துள்ளது திமுக.