எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் தரப்பினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினர்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உட்கட்சிப் பிரச்சனை, ஓபிஎஸ் என யாரைப் பற்றியும் பேசவில்லை. உட்கட்சியில் பிரச்சனை இல்லை. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி என யாரைப் பற்றியும் விவாதிக்கவில்லை. எங்களது நோக்கம் திமுகவை வீழ்த்த வேண்டியது. அதற்கேற்றவாறு நாற்பது தொகுதிகளிலும் வெல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். அதற்காகத்தான் இந்தக் கூட்டம். ஆண்டிகள் சேர்ந்து ஒன்றாக மடம் கட்டுவது வீண். அவர்களைப் பற்றி விவாதித்து என் பொன்னான நேரத்தை இழக்க விரும்பவில்லை.
அதிமுக தலைமையில் தான் கூட்டணி. அதில் என்ன சந்தேகம். எடப்பாடி பழனிசாமியே அதிமுக தலைமையில் தான் கூட்டணி எனச் சொல்லியுள்ளார். அது சட்டமன்றத் தேர்தல் என்றாலும் சரி, பாராளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீட்டை அதிமுகவே முடிவு செய்யும். எங்கள் தலைமையை ஏற்று வரும் கட்சிகளுடன் தான் கூட்டணி. அதற்குத்தான் இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே” என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, செய்தியாளர்கள் ஓபிஎஸ் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ஜெயக்குமார் உடனிருந்த ஒருவர், “அப்படி ஒரு ஆள் இல்லை” எனக் கூற, அதற்கு ஜெயக்குமார், “அப்படியெல்லாம் பேசக்கூடாது” என அவரிடம் கடுமை காட்டியது குறிப்பிடத்தக்கது.