Skip to main content

வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்; தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்து பீகார் அதிகாரிகள் குழு

Published on 05/03/2023 | Edited on 05/03/2023

 

North State Workers' Issue; Committee of Bihar Officers on the activities of Tamil Nadu Govt

 

வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு வந்த பீகார் அதிகாரிகள் குழு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தது.

 

தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அப்படி யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள். அவர்களை வைத்து சிலர் கீழ்த்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் திமுக அரசும் தமிழ்நாட்டு மக்களும் அரணாக இருப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார். 

 

இதனிடையே வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் பரவிய வதந்தியை அடுத்து இன்று பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது. இந்த நிலையில் பீகார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவும், ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து ஐபிஎஸ் அதிகாரி தமிழ்வாணன் உள்ளிட்டோர் கொண்ட குழுவும் தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடத்தப்பட்டது.

 

இந்நிலையில் இன்று பீகார் அதிகாரிகள் குழு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் 4 பேர் கொண்ட குழு ஆய்வு செய்வதற்காக வந்தோம். சென்னையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். சென்னையில் நடந்த ஆலோசனைக்கு பின் இன்று காலை திருப்பூரில் உள்ள உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதில் ஜோத்பூரில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்த சம்பவமாக கருதிக்கொண்டு இணையத்தில் அதிகம் பரவப்பட்டது. அதனைப் பார்த்தவர்கள் அதனை உண்மையென நம்பிவிட்டனர். 

 

திருப்பூர் அதிகாரிகள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து அங்கு வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களிடமும் பேசியுள்ளனர். மேலும், அவரச உதவி எண் அறிவித்தது; போலிச் செய்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது போன்ற செயல்களை தொடர்ந்து திருப்பூர் காவல்துறையும் திருப்பூர் மாவட்ட உயரதிகாரிகளும் செய்து வந்துள்ளனர். நாங்கள் தொடர்ந்து பீகார் மாநில தொழிலாளர்களை சென்று சந்திக்க இருக்கிறோம். அவர்களுடனும் ஆலோசனை நடத்த இருக்கிறோம். அவர்களிடம் இருந்து செய்திகள் கிடைத்தால் அதை திருப்பூர் மாவட்டத்திற்கு தெரிவிப்போம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் மிக மிக திருப்திகரமாக இருந்தது. தமிழக அரசுக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் நன்றி” எனக் கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்