இந்தியப் பிரதமர் மூன்று மணி நேரப் பயணமாக கடந்த 14ஆம் தேதி தமிழகம் வந்தார். அப்போது, அர்ஜுன் பீரங்கியை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்தார். அதன்பிறகு, நேரு உள்விளையாட்டு அரங்கில் காணொளி காட்சி மூலமாக ரூ.8,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். இதனை முடித்துக்கொண்டு கேரள மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன், “வரும் 25ஆம் தேதி பிரதமர் மோடி கோவைக்கு வருகிறார். அவரை வரவேற்க பாஜக சார்பில் பெரும் திட்டம் வைத்துள்ளோம். அதேபோல், அந்த நேரத்தில் பிரமாண்டமான தேர்தல் பிரச்சார கூட்டத்தையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி பாஜகவின் இளைஞரணி மாநாட்டை சேலத்தில் நடத்தவிருக்கிறோம். இதற்கு, அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவிருக்கிறார். தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர்கள் தமிழகம் வரவிருக்கிறார்.
திமுக இந்துக்களுக்கும், இந்து கடவுள்களுக்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் எதிரானது. ஊழலுக்கும் கட்டப்பஞ்சாய்த்துக்கும் ஆதரவானது. அதனால், திமுகவுக்கும் எங்கள் தேசபக்தருக்குமான தேர்தல் இது. தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றது திமுக. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ்ச் சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, வேடிக்கைதான் பார்த்தனர். திமுக தலைவர் ஸ்டாலின், தேவர் சமாதியில் திருநீரை தட்டிவிட்டார். ஸ்ரீரங்கத்தில் வைத்த குங்குமத்தை அழித்தார். மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வார். ஆனால், இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லமாட்டார். இந்த 'வெற்றி வேல்' யாத்திரை வெற்றியைக் கொடுத்ததால், தமிழக மக்கள் நமக்கு மிகப் பெரிய தோல்வியைக் கொடுப்பார்கள் எனும் பயத்தில் ஸ்டாலின் வேலை தூக்கியுள்ளார்” என்று தெரிவித்தார்.