கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கியது. புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை துவங்கினார். அப்பொழுது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் மற்றும் விசிக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் உடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்கியுள்ளது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ''பொங்கலுக்கான பணம் கொடுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் எதற்காக பொங்கலுக்குப் பணம் கொடுத்தீர்கள். அதற்குமுன் ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருக்கும்பொழுது பொங்கலுக்கு பணம் கொடுக்கவில்லையே. போன வருடம் தேர்தல் வரப்போகிறது என்பதற்காக பணம் கொடுத்தீர்கள். ஆனால் இந்த ஆட்சி அப்படி அல்ல. நாங்கள் சொன்னதை செய்தோம். திமுக ஆட்சிக்கு வந்தால் கரோனா நிவாரணம் 4 ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொன்னோம். சொன்னபடி கரோனா நிவாரணத் தொகையை முழுமையாக வழங்கியிருக்கிறோம்.
இதையெல்லாம் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அம்மா கிளினிக் பற்றி சொல்லியிருந்தார்கள். திமுக ஆட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கான ஆட்சி இல்லை. அம்மா கிளினிக் என்று ஆரம்பித்துவிட்டு அங்கு டாக்ட்டரையும் போடவில்லை. பேருக்காக தொடங்கி வைத்துவிட்டு அந்த கட்டடத்திற்கு வாடகையும் கொடுக்காம போயிட்டீங்க. காழ்ப்புணர்ச்சியால் அம்மா கிளினிக் மூடப்பட்டது என்றால் அம்மா உணவகம் இன்றும் செயல்படுகிறதே அதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள். குட்காவை பிரபலப்படுத்திய பெருமை அதிமுகவையே சேரும்'' என்றார்.