தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மிக வலுவாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவோடு இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டது. இதன் காரணமாக நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வலுவான கூட்டணியை கட்டமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வந்தார்.
அதன்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றனர். பின்னர் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள பாஜக, வருகின்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயத்தில், பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது அதனுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு பாஜகவிற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரண்டு பெரிய கட்சிகளுமே பாஜக வை வீழ்த்த வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது தொகுதியில் உள்ள பொதுமக்கள் வேட்பாளர்களிடம் தொகுதி பிரச்சனைகளை கூறி வாக்கு வாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பசுபதி, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், வாணியம்பாடியில் உள்ள பெருமாள்பேட்டை, கதர்பேட்டை, கச்சேரி சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்குள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு கடையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டும், அங்குள்ள தர்பூசணி கடையில் தர்பூசணி பழம் விற்பனை செய்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் உதயேந்திரம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். மதிய நேரத்தில் வாட்டி வதைக்கும் வெயிலில் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வாணியம்பாடி தொகுதியின் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணொருவர், எம்.எல்.ஏ செந்தில்குமாரை நிறுத்தியுள்ளார்.
அங்கு நின்ற அவரிடம் ஆவேசமாக பேசிய அந்தப் பெண், நான் இங்குள்ள பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். என்னை முன்னாள் அமைச்சர் கேசி.வீரமணி பணியில் சேர்த்து விட்டார். பின்னர் அதிமுகவை சேர்ந்தவர்களால் எனக்கு வேலை போனது. ஏன் என்னை வேலையை விட்டு தூக்கி விட்டீர்கள் எனக் கேட்டால் வாய் பேசுகிறேன் என்கிறார்கள். நான் எதற்காக வாய் பேசுகிறேன் என்று அவர்களுக்குத் தெரியுமா?... என அவரின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.
அதற்கு பதில் அளித்த அதிமுக எம்.எல்.ஏ இந்த பேரூராட்சியில் திமுககாரர் தானே தலைவராக உள்ளார்... என்று மடக்கியுள்ளார். ஆனாலும் அவரை விடாமல் பேசிய அந்தப் பெண், எனக்கு வேலை போன போது, அதிமுகவினர் தான் இருந்தார்கள். எனக் கூறி கொந்தளித்துள்ளார். அப்போது அங்கு வந்த சில அதிமுக தொண்டர்கள் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உடனே பதிலடி கொடுத்த அந்தப் பெண், சார்... எனக்கும் உங்களுக்கும் பேச்சு இல்ல... நான் எம்.எல்.ஏ விடம்தான் பேசுகிறேன்.... உங்களிடம் பேசவில்லை... என எச்சரித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. அப்போது செய்வதறியாது தவித்து நின்ற அதிமுக எம்.எல்.ஏ, ஒருவழியாக அந்தப் பெண்ணிடம் சமாதானமாகப் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.