இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகத் தன் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கி உயிரையே தியாகம் செய்தவர் மகாத்மா காந்தி. அவருடைய அஸ்தியைப் போய் திருடியிருக்கின்றார்கள் மத்தியப்பிரதேசத்தில். அந்த அற்பர்களின் நோக்கம், அண்ணல் பிறந்தநாளன்று அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதே. ஆம். மத்திய பிரதேசம் – ரேவா மாவட்டத்திலுள்ள காந்தி அருங்காட்சியகமான பாபு பவனில் காந்தியின் போட்டோவுக்குக் கீழே ‘தேசத்துரோகி’ என்றும் எழுதியிருக்கின்றனர்.
இதுகுறித்து, அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் குர்மீத்சிங் அளித்திருக்கும் புகாரின் பேரில், பிரிவு 295-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிசிடிவி ஃபுட்டேஜை ஆய்வு செய்து, அஸ்தி திருடியவர்களைக் கண்டுபிடிப்பதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
குர்மீத்சிங் செய்தியாளர்களிடம் “காந்தியின் சித்தாந்தமானது மீண்டும் மீண்டும் இழிவுபடுத்தப்படுகிறது. காந்தியைக் கொலை செய்த கோட்சேவுக்கு ஆதரவுக்குரல் கொடுப்பவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும்.” என்கிறார்.
சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் எதுவும் ஆகிவிடாது. காந்தியே ஒரு மகாத்மா! இந்தியாவுக்கு இன்னொரு பெயரே காந்தி தேசம்! அவருடைய புகழுக்குக் களங்கம் கற்பிக்க நினைப்பவர்களை என்னவென்று சொல்வது? அய்யோ பாவம்!