அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு பொறுப்பேற்று மீனவர்களுக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் தான் திமுக செயல்படுகிறது. பேனா சின்னத்தை பொறுத்தவரை 80 கோடி ரூபாய் பணம். அது முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பப் பணமா? மக்கள் கட்டும் வரியினை வாங்கி கலைஞருக்கு நினைவுச் சின்னம் வைக்கிறார்கள்.
திமுகவிற்கான தொண்டு நிறுவனத்தில் கொள்ளை அடித்த பணத்தை தான் வைத்துள்ளீர்கள். அந்த பணத்தில் அறிவாலயத்தில் சிலையை வைத்துக்கொள்ளுங்கள். திருவள்ளுவர் சிலையை விட பேனா சின்னம் உயரமாக இருக்க வேண்டுமாம். வரலாற்றில், தமிழ்நாட்டில் உயரமான சிலை எது என கேள்வி வரும்போது, இனிமேல் திருவள்ளுவர் சிலை என சொல்ல முடியாது. கலைஞர் நினைவுச் சின்னம் தான்.
திருவள்ளுவர் உலகப் பொதுமறை கொடுத்தவர். அவருக்கு 133 அடியில் சிலை வைப்பது நல்ல விஷயம். இவருக்கும் ஏன் 134 அடியில் சிலை வைக்க வேண்டும். திருவள்ளுவரைப் போல் உலகப் பொதுமறை தந்தவரா. ஊழலைக் கற்றுக்கொடுத்தவர், குடிக்க கற்றுக்கொடுத்தவர். தமிழ்நாட்டை சீரழித்தவர்” எனக் கூறினார்.