கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரத்தில் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த பேபி ரிகானா அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளின் படிப்புச் செலவை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி ஏற்றார்.
நேஷனல் வாலிபால் பயிற்சியாளரான ஆறுமுகம் என்பவர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இன்று (13.02.2021) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரத்தில் ஆறுமுகம் என்பவரின் மனைவி பேபி ரிகானா மு.க. ஸ்டாலினிடம், “நான் கணவரைப் பிரிந்து கல்லூரி படிக்கும் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்களைப் படிக்க வைக்கக் கூட முடியாமல் மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உதவ வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர், பொன்.கௌதமசிகாமணி அவர்கள், கரோனாவால் உயிரிழந்த ஆறுமுகத்தின் கல்லூரி படிக்கும் இரண்டு பெண் பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்றார். பின்னர் பேசிய ஸ்டாலின் “நான் பதவியேற்ற 100 நாட்களில் உங்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என தெரிவித்திருந்தேன். ஆனால் பேபி ரிகானாவின் கோரிக்கை 100 நிமிடங்களிலேயே தீர்க்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.