பிரதமர் மோடியின் வருகையின்போது, வீடுகள் தோறும் கறுப்புக்கொடி கட்டிவைக்க வேண்டும் எனவும், அவர் செல்லும் வழியெல்லாம் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பைக் காட்டவேண்டும் எனவும் விசிக சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
பாதுகாப்புத்துறைத் தொடர்பான கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். ஏற்கனவே, திமுக தலைமையில் கூட்டப்பட்ட தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பிரதமர் மோடி செல்லும் வழியெங்கும் கறுப்புக் கொடி ஏந்தி அறவழியில் நமது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவித்த பிறகும் அது விதித்தக் கெடுவை மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு, தமிழக மக்களின் உணர்வுகளை எடுத்துக்காட்டும் விதமாக தமிழ்நாடு முழுவதும் இல்லங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டுமெனவும், கறுப்பு உடையோ கறுப்பு பட்டையோ அணிய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.