இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.
காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.