இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோல் திமுக பணிக்குழு உறுப்பினர்களுடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஓ.பி.எஸ் தரப்பினருக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்று (10-02-24) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் முடிந்து ஓபிஎஸ் பாஜகவில் இணைந்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாஜகவுக்காக கூலிக்கு மாரடிப்பவராக இன்று ஓ.பி.எஸ்ஸின் குரல் இருக்கிறது. அதனால் தேர்தல் முடிந்த பிறகு ஓபிஎஸ் பாஜகவில் ஐக்கியமாவது உறுதி. எங்களுடைய தனித்தன்மையை பல கட்டங்களில் நாங்கள் நிரூபித்து இருக்கிறோம். பா.ஜ.கவுடன் இப்போது கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை ஏற்கனவே எடுத்துவிட்டோம். நாங்கள் யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். எங்களை நோக்கித்தான் கட்சிகள் வரும்” என்று கூறினார்.