72 நாட்களுக்கு பிறகு இன்று அதிமுக தலைமை கழகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி, முன்னதாக வெளியே உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ''எதிர்கால நன்மையைக் கருதி ஒற்றைத் தலைமை வேண்டும் என முடிவு செய்தும், அதோடு இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்ததற்கும் கழக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே கடந்த 11 ஆம் தேதி பொதுக்குழு நடந்து கொண்டிருந்த நேரத்தில் தலைமை அலுவலகத்தில் கதவுகளை உடைத்து ஒரு சிலர் புகுந்து அறைக்குள் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி, அந்த பொருட்களை எல்லாம் வெளியே கொண்டுவந்து தீயை வைத்து கொளுத்தியுள்ளனர்.
பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். கழகத்திற்கு சொந்தமான இடங்களின் பத்திரங்கள் எல்லாம் தலைமைக் கழகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. அதையும் அந்த பத்திரங்களையும் திருடி சென்றிருக்கிறார்கள். தலைமை கழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை சேதப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டும் திமுக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பால் தலைமை கழகம் எங்களுக்கு கிடைத்தது. விரைவாக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடரும். அதிமுகவிற்கு பிளவு என்பதே கிடையாது. ஒருசிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் மீது பொதுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக்கொள்வீர்களா?' என கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த இபிஎஸ், '' மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் தொண்டர்கள். ஒரு கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறவர் இப்படி செய்துள்ளார். சாதாரண தொண்டன் செய்யவில்லை. உயர்ந்த பொறுப்பு வகிக்கும் ஒருவரே கொள்ளை கூட்டத்திற்கு தலைமை தங்குவது போன்று இரண்டு பக்கமும் ரவுடிகளை அழைத்துக்கொண்டு வந்து அலுவலகத்தின் கதவை காலால் எட்டி உதைக்கும் காட்சியை நீங்கள் எல்லாம் ஒளிபரப்பினீர்கள். நாட்டு மக்களே பார்த்தார்கள். இப்படிப்பட்டவர்களை எப்படி தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் அவருக்கு இந்த உயர்ந்த பதவியை கொடுத்தோம். ஆனால் அவர் கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளார். திமுகவின் பினாமியாக இருந்துகொண்டு கட்சியை உடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். தொண்டர்களுக்கு கொடையாக கொடுக்கப்பட்ட இடம் இந்த இடம். அப்படிப்பட்ட இடத்தில் உயர்ந்த பொறுப்பில் இருந்துகொண்டு இவரே கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றால் எந்த தொண்டன் அவரை ஏற்பான்'' என்றார்.