8ஆம் தேதி அ.தி.மு.க. கொடியுடன் ஜெயலலிதா காரில் வரும் சசிகலா. அ.தி.மு.க. கொடியைப் பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் டி.ஜி.பி.யிடம் புகார் மனு கொடுத்துள்ளார்கள். அதை மீறி அ.தி.மு.க. கொடியுடன் வர சசிகலா திட்டமிட்டுள்ளார்.
பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி வழியாகத்தான் சென்னைக்கு வர வேண்டும். கிருஷ்ணகிரி என்பது சசிகலாவை பொதுக்குழுவில் கடுமையாக விமர்சித்த தலைவர் வசிக்கும் பகுதி. சசிகலா அ.தி.மு.க. கொடியைப் பயன்படுத்தக்கூடாது என டி.ஜி.பி.யிடம் அவரது தலைமையில்தான், அ.தி.மு.க. அமைச்சர்கள் சென்று புகார் கொடுத்தனர்.
இப்போது அவர், சசிகலா அ.தி.மு.க. கொடியோடு 8ஆம் தேதி வரும்போது, பெரும் பரப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை விளைவிக்க திட்டமிட்டுள்ளார் என மத்திய அரசின் உளவுத்துறை, ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது.
இதைக் கேள்விப்பட்ட சசிகலா தரப்பு, அந்தப் பதற்றத்தை எதிர்க்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளது. 8ஆம் தேதி சசிகலா வரும்போது பரபரப்பான சம்பவங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் இரு தரப்பும் டென்ஷனோடு திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.