திண்டுக்கல் மாவட்டத்தில், இந்நாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் சில நாட்கள் முன்பு வரை எதிரும் புதிருமாய் தனித்தனிக் கோஷ்டிகளாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். கடந்த வாரம் கொடைக்கானலில் மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி.
இதற்கான அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.சின் பெயரை தவிர்த்து விட்டார்கள். ஆனால் ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளரும் திண்டுக்கல் சீனிவாசனின் எதிரியுமான நத்தம் விஸ்வநாதனின் பெயர் பளிச்சென இடம் பெற்றிருந்தது. தனது பெயர் எதிரணி அழைப்பிதழில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு மனம் பூரித்த நத்தம், கொடைக்கானல் நகரின் பல இடங்களில் முதலமைச்சர் எடப்பாடியை வாழ்த்தி பிளெக்ஸ் பேனர்களை வைத்தார். இந்தப் பேனர்களில் திண்டுக்கல் சீனிவாசன் பெயரும் இல்லை. படமும் இல்லை.
ஆனால், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ தானளித்த விளம்பரங்களில் நத்தத்தின் பெயரையும் படத்தையும் போட்டிருந்தார். விழா மேடையில் தனக்கருகில் அமர்ந்திருந்த அமைச்சர் சீனிவாசன் பேச எழுந்ததும், மூன்றாவது இருக்கையில் இருந்த நத்தத்தை கூப்பிட்டு தனது அருகில் உட்காரச் சொன்ன எடப்பாடி, ""இனியாவது இருவரும் சேர்ந்து இணைந்து மாவட்டத்தில் வேலை செய்யுங்கள். உங்களுக்கு வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன்'' என்று அரைமணி நேரம் பேசி, அதற்குள் நத்தத்தை தனது ஆதரவாளராக்கிக் கொண்டார்.
விழா முடிந்து முதலமைச்சர் கிளம்பிய மறுநாள், எடப்பாடிக்கு நன்றி தெரிவித்து நத்தம் கொடுத்த நாளிதழ் விளம்பரங்களில் திண்டுக்கல் சீனிவாசன் படத்தை போட்டிருந்தார். ஓ.பி.எஸ். அணி முக்கிய தளபதி ஒருவரை இழந்து விட்டிருக்கிறது.