திருவண்ணாமலை மாவட்டத்துக்கு செப்டம்பர் 9ம் தேதி, அரசு துறை ஆய்வு கூட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார். அதிகாரிகளுடனான இந்த ஆய்வு கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகள், 2 நாடாளுமன்ற தொகுதிகளில் 5 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.கவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களாக உள்ளனர். 2 நாடாளுமன்ற தொகுதிகளில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.கவின் அண்ணாதுரையும், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஷ்ணுபிரசாத்தும் எம்.பிக்களாக உள்ளார்கள்.
தமிழகத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கு எதிர்கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை ஆளும்கட்சி அழைப்பதில்லை. அந்த வரிசையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் ஆய்வு கூட்டங்களுக்கு எதிர்கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் புறக்கணிப்பதை தி.மு.க தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் வன்மையாக கண்டித்தார்.
அதன்பின் தற்போது கடலூர் உட்பட சில மாவட்டங்களில் அரசு சார்பில் எதிர்கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்புவிடுத்தாலும், கூட்ட அரங்குக்குள் அனுமதிக்காமல் சிக்கல் செய்வதால் தி.மு.கவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வதில்லை.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள தி.மு.கவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதுப்பற்றி நாம் அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் என எதையும் அச்சடிக்கவில்லை. அதனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆய்வு கூட்டம் குறித்து தகவல் கூறி தொலைபேசி மூலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, செப்டம்பர் 9ம் தேதி தி.மு.க பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் பொதுக்குழு உறுப்பினர்களுடன் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், அணி அமைப்பாளர்களை கலந்துகொள்ள சொல்லியுள்ளதால், ஆய்வுக்கூட்டத்தில் எங்கள் கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வது சந்தேகமே. மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளிக்கலாமா என ஆலோசனை நடக்கிறது என்றார்கள்.