மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் கடந்த 8 ஆம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. இன்று (10 ஆம் தேதி) பிரதமர் மோடி இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது பேசவிருக்கிறார்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் மதுரை எய்ம்ஸ் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசுகையில், “மதுரையில் ரூ. 1,977 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1,627 கோடி ரூபாய்க்கான கடன் ஜெய்காவில் இருந்து எடுத்து மத்திய அரசின் செலவில் கட்டப்படுகிறது. மத்திய அரசு இந்தக் கடனைத் தீர்த்து வைக்கும். இதன் மூலம் தமிழக அரசுக்கு எந்தக் கடனும் இல்லை. மற்ற இடங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 740 படுக்கைகள் தான் இருக்கும், ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 950 படுக்கைகள் இருக்கும். கூடுதலாக இருக்கும் 150 படுக்கைகளும் தொற்று நோய் வராமல் இருப்பதற்கான தடுப்பு பிரிவாக செயல்படும்” எனத் தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது திமுக உறுப்பினர்கள் வெட்கம் வெட்கம் என முழக்கம் எழுப்பினர்.
ஒரு கட்டத்திற்கு மேல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாடு பற்றி இன்னும் நிறைய இருக்கிறது. கேட்டுவிட்டு போங்கள்” என்றார். தற்போது இந்த காணொளி பரவி வருகிறது.
இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிநடப்பு குறித்து பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர், “மதுரை எய்ம்ஸ் சிறப்பாக அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக ஜெய்காவிடம் கடன் வாங்கிக் கட்டுகிறோம்”. என்றார் நிதியமைச்சர். “எப்போ? எப்போ?” என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம். 5 ஆண்டுகளாகிவிட்டது, கடனும் வந்து சேரவில்லை. கட்டடமும் கட்டப்படவில்லை. கண்டித்து வெளிநடப்பு செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
“95 சதவீதமா... இருந்த பெயர் பலகையை கூட காணவில்லை” - எம்.பி சு.வெங்கடேசன்