சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''திமுக ஆட்சி மீது ஒரு களங்கத்தை உருவாக்கும் வகையில் நடந்து முடிந்த வழக்குகளை மீண்டும் தாமாக முன்வந்து விசாரிக்க இருக்கின்ற காரணத்தினால் அது குறித்து விளக்கம் அளிப்பது திமுகவின் கடமை என்கிற காரணத்தினால் கழகத்தின் அமைப்புச் செயலாளர் என்ற முறையிலும், திமுகவின் சார்பில் 1995 லிருந்து பல வழக்குகளை தொடர்ந்தவன் என்ற முறையில் சில விளக்கங்களை நான் அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். திமுகவை பொறுத்த வரையில் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையும், மரியாதையும் உண்டு.
நீதிமன்றத்தின் வாயிலாக பல வெற்றிகளை பெற்றிருக்கக் கூடிய ஒரு இயக்கம் தமிழகத்தில் உண்டு என்று சொன்னால் அது திமுக தான். குறிப்பாக ஜெயலலிதாவுடைய ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்களை எல்லாம் நீதிமன்றத்தின் வாயிலாக நிரூபித்து உச்சநீதிமன்றம் வரை நிருபிக்கப்பட்டதெல்லாம் எல்லோரும் அறிந்த ஒன்று. எல்லாவற்றுக்கும் மேலாக கலைஞர் மறைந்த நேரத்தில் அவருக்கு அண்ணா சதுக்கத்திற்கு பக்கத்தில் இடம் தர முடியாது என்று அன்று முதலமைச்சராக இருந்த எடப்பாடி மறுத்த நேரத்தில், இரவோடு இரவாக நீதிமன்றம் கூடி வழக்கை விசாரித்து கலைஞருக்கு அவர் விரும்பிய படியே அண்ணாவின் காலடியில் அவரை அடக்கம் செய்வதற்குரிய உரிமையை நீதிமன்றத்தின் வாயிலாகத்தான் நாங்கள் பெற்றோம் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆக நீதிமன்றத்தின் மீது திமுக நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிப்பதாக அறிக்கையில் பார்த்திருக்கிறோம்.
உள்ளபடியே திமுகவை பொருத்தமட்டிலும் வழக்குகளை எல்லாம் சந்திப்பதற்கு தயாராக இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் விளக்கம் அளிப்பது என்னுடைய கடமை. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் எப்படி எல்லாம் பழிவாங்கப்பட்டார்கள் என்பது நாடறிந்த உண்மை. உதாரணத்திற்கு சீனிவாசன் என்கின்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரசுக்கு எதிர்ப்பாக தீர்ப்புகளை வழங்கினார் என்பதற்காக அவருடைய வீட்டு குடிநீர் இணைப்பும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோல சத்யதேவ் என்ற நீதியரசர் அரசுக்கு சில எதிர்ப்பான தீர்ப்புகளை வழங்கினார் என்பதற்காக இதே மாதிரி அவருடைய இல்லத்திற்கும் நடந்தது. மற்றொரு நீதிபதியான ஏ.ஆர். லட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது. அதேபோல் நான் போட்ட டான்சி வழக்கை விசாரித்த சிவப்பா என்ற நீதிபதி ஜெயலலிதாவுடைய மனுவை ஏற்காமல் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு போட்ட காரணத்தால் 2001-ல் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் எப்படி பந்தாடப்பட்டார், பதவியை ராஜினாமா செய்துவிட்டு போனார் என்பதெல்லாம் வரலாறு.
ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 2018 ல் திமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி டெண்டரில் 3600 கோடி ரூபாய்க்கு ஊழலும் முறைகேடும் நடைபெற்றது என நான் தொடர்ந்து வழக்கை சென்னையில் அன்றைக்கு விசாரித்த நீதியரசர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு போட்டார். உடனடியாக எடப்பாடி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று ஸ்டே வாங்கினார். இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு ஆனந்த வெங்கடேஷ் (இதே நீதிபதி) முன்னால் வந்தது. அவர் தந்த தீர்ப்பு உங்களுக்கு எல்லாம் தெரியும். நீதிமன்றத்தினுடைய நேரத்தை வீணாக்க கூடாது என்று சொன்ன அதே நீதிபதி இரண்டு வாரம் கழித்து கே.கே.எஸ்.எஸ்.ஆர் வெறும் 44 லட்சம் ரூபாய் டிஷ் ப்ரொபஷனல் கேசில் தாமாக வழக்கை விசாரித்து நீதிமன்றத்தினுடைய பொன்னான நேரத்தை 44 லட்சத்திற்காக செலவிடுவேன் என்று சொல்லி இருக்கிறார். அதேபோல் பொன்முடி வழக்கிலே பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது. விழுப்புரத்தில் நடைபெற்ற வழக்கு வேலூருக்கு மாற்றப்பட்டது. மாற்றப்பட்டது என்றால் தாமாக மாற்றிக் கொள்ளவில்லை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதற்குரிய உத்தரவு போட்டார்கள். அதையெல்லாம் கேலி செய்கின்ற வகையில் கிண்டல் செய்கின்ற வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. விசாரணை நடத்தி விடுவிக்கப்பட்டவர்களை தாமாக எதிர்த்து விசாரிக்க வேண்டும் என் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் சொல்லியிருக்கிறார்.
நாங்கள் நிச்சயமாக உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வோம். அது மட்டுமல்ல ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்ட அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்களோ அதே முகாந்திரத்தின் அடிப்படையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இன்றைக்கும் ஓபிஎஸ் எம்எல்ஏவாகத்தான் இருக்கிறார். நத்தம் விஸ்வநாதனும் எம்எல்ஏவாக இருக்கிறார். எம்எல்ஏக்களின் வழக்கை விசாரிக்க அதிகாரம் கொண்டது நீதிமன்றம். ஆனால் திமுகவின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது என்று சொன்னால் நிச்சயமாக நீதிபதிக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. தாமாக முன் வந்து விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கும், நீதிபதிக்கும் இருக்கிறது. ஆனால் அது பழிவாங்கும் நோக்கத்தில் இருக்கக் கூடாது'' என்றார்.