திமுக பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுப்பற்றி திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் பேசியபோது, கட்சியில் தலைவர் பதவியை விட பொதுச்செயலாளர் பதவி என்பது அதிக அதிகாரம் மிக்கது. அந்த பதவியில் அமர்பவர் தலைவருடன் இணைந்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்பது விதி. கட்சியை பொருத்தவரை பொதுச்செயலாளர் தான் அதிகாரம் மிக்கவர். அந்த இடத்தில் தனக்கு அனுசரணையான, தன் உள்ளத்தை புரிந்துக்கொண்ட நபர் இருக்க வேண்டும் என்பதாலே பேராசிரியரை பொதுச்செயலாளராக்கினார் கலைஞர். தனது மனசாட்சி என முரசொலிமாறனை தலைவர் சொன்னார். உண்மையில் தலைவரின் பாதியாக வாழ்ந்தவர் பேராசிரியர். தலைவர் என்ன நினைப்பார், எப்படி செயல்படுவார், எப்படி முடிவெடுப்பார் என்பதை தீர்க்கமாக அறிந்தவர் பேராசிரியர் மட்டுமே. கழகமே உயிர் மூச்சு என செயல்பட்டவர், கட்சியை, கொள்கையை எந்த காலத்திலும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்ககூடாது என்பதில் தீவிரமாக இருந்தவர் பேராசிரியர். அவர் மறைவுக்கு பின் அந்த இடத்தில் யார் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி அதிகரித்துள்ளது. அதில் துரைமுருகன், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு, பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. பொதுச்செயலாளர் பதவியில் அமரும் அளவுக்கு திமுகவில் சீனியராக இருப்பது துரைமுருகன் தான், அதனால் கட்சி பொருளாளராக உள்ள துரைமுருகனை அந்த இடத்துக்கு நகர்த்தலாம், பொருளாளராக அவருக்கு அடுத்துள்ள சீனியர்கள் யாரையாவது நியமிக்கலாம் என தலைவர் ஸ்டாலினிடம் தங்களது கருத்துகளை கூறியுள்ளார்கள் கட்சி முக்கியஸ்தர்கள் என்கிறார்கள் திமுகவினர். அந்த மாற்றம் தற்போதே நடைமுறைப்படுத்துவதா அல்லது உட்கட்சி தேர்தல் நடைபெறுவதால் தலைமைக் கழக தேர்தல் நடைபெறும்போது நடைமுறைப்படுத்தலாமா என்ற ஆலோசனையும் நடக்கிறதாம்.
பொதுச்செயலாளராக துரைமுருகன் நியமிக்கப்பட்டால், அவர் வகித்துவரும் பொருளாளர் பதவி யாருக்கு என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, பொன்முடி, நேரு, ஆ.ராசா, ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு ஆகியோர் இந்த பதவியை பெற விரும்புகிறார்களாம். கட்சியின் சீனியர்கள் பலர் மா.செயலாளர்களாக உள்ளனர். அதில் வேகமானவர்களை தலைமை கழக பதவிகளுக்கு அழைத்துக்கொண்டு மாவட்டத்தில் சீனியராக உள்ள மாவட்ட கழக நிர்வாகி அல்லது மாவட்ட இளைஞரணி செயலாளர்களாக இருப்பவர்களில் தகுதியானவர்களை மா.செவாக்கும் திட்டமும் திமுக தலைவரிடத்தில் உள்ளது. அதுகுறித்து உட்கட்சி தேர்தல் தொடங்கியதில் இருந்து தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார் என்கிறார்கள்.