தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை கட்சிகளிடையே தீவிரம் அடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் முன்னிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், "தொகுதி எண்ணிக்கையா, லட்சியமா என்றால் லட்சியத்திற்குத்தான் முதலிடம் தரப்படும். சில கட்சிகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற வகுப்புவாத சக்திகள் முயற்சி செய்கின்றன. தி.மு.க. கூட்டணியுடன் இணக்கமான முறையில் ஒப்பந்தம் முடிந்திருக்கிறது" என்றார்.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாங்கள் போட்டியிட விரும்பும் 11 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பட்டியலை தி.மு.க. தலைமையிடம் வழங்கியது. அந்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. திருத்துறைப்பூண்டி, பவானி சாகர், தளி, சிவகங்கை, அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, வால்பாறை, குன்னூர், வேளச்சேரி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. தலைமை ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.