2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டத்தொடர் துவங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கமளித்தார். இதனை அடுத்து, கிருஷ்ணகிரியில் கொலை செய்யப்பட்ட ஜெகன் குறித்த விவகாரத்தை கவன ஈர்ப்பு தீர்மானமாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், “ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழந்து இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்; அந்த வேதனையோடுதான் உரையை தொடங்குகிறேன்; பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்றே 10,735 மின்னஞ்சல்கள் வரப்பெற்றன; 27 மட்டுமே ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆதரவாக வந்துள்ளன. அரசியலில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்; ஆனால் மனித உயிர்களை பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதில் இதயம் உள்ள யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது; இருக்கவும் கூடாது; மாநிலத்தில் உள்ள மக்களைக் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.. மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு உரிமை உண்டு; மனசாட்சியை உறங்கச் செய்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, “முதலமைச்சர் கொண்டு வந்த ஆன்லைன் தடை சட்ட மசோதாவை இந்த மன்றம் விவாதம் இன்றி ஏகமனதாக நிறைவேற்றி இருக்கலாம். பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுள்ளது. இருப்பினும் முதல்வர் கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அதிமுக சார்பாக முழுமையாக வரவேற்கிறோம்” என்றார். இவ்வாறாக அ.தி.மு.க. சார்பில் வரவேற்பதாக ஓ.பி.எஸ். பேசியதற்கு இ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை பொறுத்துத்தான் அவையில் பேச வாய்ப்பு தர வேண்டும் என இ.பி.எஸ். வலியுறுத்திய நிலையில், ஓ.பி.எஸ்.க்கு பேச வாய்ப்பளித்ததில் பேரவைக்கும், எனக்கும் எந்த உள்நோக்கமும் கிடையாது; முன்னாள் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பேச அவருக்கு வாய்ப்பு அளித்ததாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். சபாநாயகர் ஓபிஎஸ்க்கு பேச வாய்ப்பளித்ததால் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.