கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டமன்றத்திற்கு நாளை (10.05.2023) சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தற்போது ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்றுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிரமாக தங்கள் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
காங்கிரஸ் - பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி அங்கு நிலவுகிறது. அதோடு அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் காங்கிரஸ், பாஜக என இரு தேசிய கட்சிகளுக்கும் கர்நாடகத் தேர்தல் ஒரு வெள்ளோட்டமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்த நிலையில் நாளை பதிவாகும் வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் கடந்த 7 ஆம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, “வெறுப்பை பரப்பி அரசியல் செய்பவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்திய ஒற்றுமை பயணத்தால் காவிக் கட்சியான பாஜக கலக்கம் அடைந்துள்ளது. வெறுப்பை பரப்புபவர்களால் கர்நாடகாவில் எந்த வளர்ச்சியையும் கொடுக்க முடியாது. வரும் தேர்தலில் பாஜக கர்நாடகாவில் தோல்வி அடைந்தால் மோடியின் ஆசி இந்த மாநிலத்திற்கு கிடைக்காது என அவர்கள் பகிரங்கமாக மக்களிடம் மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
கர்நாடகா மக்கள் யாருடைய ஆசியையும் நம்பி இருப்பவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் சொந்த உழைப்பை நம்பி வாழ்ந்து வருபவர்கள் என்பதை பாஜகவுக்கு தெரிவிக்கிறேன். பாஜக அரசு செய்த ஊழல், முறைகேடு, சட்டவிரோதங்கள் குறித்து காங்கிரஸ் எழுப்பும் கேள்விகளுக்கு பாஜகவினர் பதில் கூறமாட்டார்கள். ஜனநாயக மதிப்பீடுகள் தங்களின் சட்டைப்பையில் இருப்பதாக பாஜகவினர் நினைக்கிறார்கள். கர்நாடகாவை ஊழலில் இருந்து விடுவித்து நல்லாட்சி வழங்க காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் கர்நாடகாவின் இறையாண்மையை காப்போம்” என்று பேசினார்.
சோனியா காந்தி இறையாண்மை குறித்து பேசியது தொடர்பாக அவருக்கு எதிராக கர்நாடக மாநில தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் கடிதத்தில், "கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது சோனியா காந்தி இறையாண்மை குறித்து பேசியுள்ளார். இறையாண்மை என்பது ஒரு தனிப்பட்ட நாட்டை குறிக்கும் சொல். இந்தியா ஒரு சுதந்திரமான நாடு. அதில் கர்நாடகா ஒரு பெருமை மிகுந்த மாநிலம் ஆகும்.
இறையாண்மை கொண்ட இந்தியாவுடன் இருக்கும் கர்நாடகத்தின் நேர்மை குறித்து இதுவரை யாரும் கேள்வி எழுப்பவில்லை. காங்கிரசின் இந்த கருத்து கர்நாடகா இந்தியாவில் இருந்து தனித்து இருப்பது போன்று உள்ளது. எனவே, இந்த கருத்து நாட்டை பிளவுபடுத்துவதாக உள்ளது. சோனியாவின் இந்த கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கர்நாடகா இந்தியாவுடன் ஒன்றுபட்டது. அதனால் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவின் இந்த புகார் தொடர்பாக சோனியா காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.