சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சென்னையிலும் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரவாயல் தொகுதியில் திமுக சார்பில் கணபதி, அதிமுக சார்பில் தற்போதைய அமைச்சரும் சிட்டிங் எம்எல்ஏவுமான பெஞ்சமின் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் லக்கி முருகன் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் பத்மபிரியா, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கணேஷ்குமார் களத்தில் உள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் மீது குற்றாட்டுகள் எழுவதும் அதிகமாகி வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள் செல்வலும் அதிகரித்து வருகிறது. தங்களுக்கு வரும் குற்றச்சாட்டுகள், புகார்கள் குறித்து தேர்தல் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் மதுரவாயல் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் லக்கி முருகன், தன் மீது உள்ள வழக்குகளை தேர்தல் ஆணைத்தில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2011ல் கண்டெய்னர் லாரி விவகாரம் ஒன்றில் புழல் சிறையில் இருந்துள்ளார் என்றும், 2021ல் எம்.ஜி.ஆர். இல்லத்தின் முன்பு கொடி மரத்தை அகற்றிய வழக்கும் ஒன்றும் இவர் மீது உள்ளதாக இவருக்கு எதிரான கோஷ்டிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறுகின்றனர்.