தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
எதேச்சையாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் கருப்பு புடவையில் இன்று சட்டமன்றத்திற்கு வந்தார். அவரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, “என்ன மேடம் நீங்களும் ஆதரவா” என்று கேட்க, “அய்யய்யோ...நான் அணிந்தது அதற்காக இல்லை” என மறுத்துவிட்டு பேரவைக்குள் சென்றார்.
தொடர்ந்து கேள்வி நேரத்தில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீவாசனுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு அளித்து அவரை சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, “காங்கிரஸ்காரங்க தான் யூனிஃபார்ம்ல வந்திருக்காங்க. நீங்களும் அதே யூனிஃபார்ம்ல இருக்க மாரி எனக்கு தெரிது” என்றார்.
தொடர்ந்து கேள்வி கேட்க எழுந்த எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “தமிழகத்திலேயே எமர்ஜென்ஸியின் போது எப்படியெல்லாம் ஆளும் கட்சி தலைவர்கள் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவூட்டுவதற்காக நான் கருப்பு உடையில் வந்திருக்கிறேன்” என்றார்.