அதிமுக உடைந்து அமமுக உருவானபோது, தினகரன் பின்னால் பல சிட்டிங் எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பலர் சென்றனர். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் நின்றது அமமுக. இதில் பல தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்கவில்லை. இதனால், தினகரன் பின்னால் அணிவகுப்பது தங்களது அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனம் தான் நடக்கும் எனச்சொல்லி தினகரனை விட்டு பெருந்தலைகள் ஒவ்வொன்றும் அதிமுக, திமுக என நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
பாண்டுரங்கன்
வேலூர் மாவட்டத்தில் அமமுக நிர்வாகிகளாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் நீலகண்டன், வேலூர் ஞானசேகரன் இருவரும் அடுத்தடுத்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரம் வாங்கி திமுகவில் இணைந்துவிட்டனர். அதற்கடுத்து இன்னும் சில அமமுக தலைகள் திமுகவுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.
அதில் முக்கியமானவர்கள், அணைக்கட்டு முன்னாள் எம்.எல்.ஏ கலையரசு, வாணியம்பாடி முன்னாள் எம்.எல்.ஏவும், அமைச்சராக இருந்தவருமான வடிவேல், முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போன்றவர்கள் திமுக நிர்வாகிகளுடன் பேசிவருவதாக கூறப்படுகிறது.
கலையரசு
இந்த மூவரில் இருவர் மட்டும் வேலூர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரும்போது, திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் எனக்கூறப்படுகிறது. இதுப்பற்றி ஸ்டாலினிடம் தகவல் கூறி அதற்கான நேரம் வாங்கப்பட்டுள்ளதாகவும் வேலூர் மாவட்ட திமுக தரப்பில் இருந்து பரபரப்பாக பேசப்படுகிறது.
வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், பள்ளிக்கொண்டா பகுதி ஒன்றியம் மற்றும் நகர பகுதிகளில் உள்ள கீழ்மட்ட அமமுக நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகளை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.