நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து கோட்டை மைதானம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
பரப்புரை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். தேர்தல் சீசனுக்கு மட்டுமே பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார். வெள்ள நிவாரணம் கேட்டால் தரமாட்டார். தமிழ்நாட்டை வெறுக்கின்ற பிரதமர் மோடிக்கு பதிலாக இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமராக போகிறவர் நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் மேல் உண்மையான மதிப்பும், இந்திய மக்கள் மீது உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கின்ற பண்பும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக நிற்பவருமாக இருப்பார்.
இன்று காலையில் நான் பெருமை கொள்ளக்கூடிய ஒரு செய்தியை சமூக வலைத்தளத்தில் பார்த்தேன். நம்முடைய திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. இன்று கனடா நாட்டில் காலை உணவு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த திட்டம் எப்படி உருப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜர் மத்திய உணவு திட்டம் கொண்டு வந்ததற்கு காரணமாக ஒரு சம்பவத்தை சொல்லுவார்கள். பெருந்தலைவர் காரில் போய்க் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரை சந்தித்தாராம். அங்கு காரை நிறுத்தி அவர்களை பக்கத்தில் வரச் சொல்லி 'இன்று பள்ளிக்கு போகவில்லையா?' என்று கேட்டார். அந்த பிள்ளைகள் 'எங்கள் குடும்பத்தில் உணவுக்கே வழி இல்லாததால் எங்க அப்பா அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை' என்று சொல்லவும் பள்ளியில் மதிய உணவு போட்டால் அதற்காகவாவது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என சிந்தித்து யோசித்து காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கினார்.
எனக்கும் அதே மாதிரி ஒரு நிகழ்வு நடந்தது. நான் முதலமைச்சரானவுடன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். ஒரு குழந்தையை பார்த்து 'என்னம்மா சாப்பிட்டீங்களா' என்று எதார்த்தமா கேட்டேன். அந்த குழந்தை 'வீட்டில் அப்பா அம்மா வேலைக்கு போறாங்க, காலையில உணவு செய்ய மாட்டாங்க அதனால் சாப்பிடவில்லை' என்று சொன்னதும் எனக்கு மனசே சரியில்லை.
கோட்டைக்கு போனவுடனே அதிகாரிகளை அழைத்தேன். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரணும் திட்டத்தை தயார் பண்ணுங்கள் என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் ரொம்ப பணிவாக சார் நம்ம நிதிநிலை ரொம்ப மோசமா இருக்கு. அதோடு இல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூட நாம் இதை சொல்லவில்லை என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன், 'வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன நம் எதிர்கால தலைமுறை குழந்தைகள் தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் படிப்பது மனதில் மனதில் பதியும். இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதி நிலையை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்க ஃபைலை தயார் பண்ணுங்கள்' என்று சொன்னேன். அந்த ஃபைலில் கையெழுத்து போட்ட கை தான் இந்த ஸ்டாலின் கை''என்றார்.