அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் நேற்று தன்னுடைய பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்கவேண்டும் என்று சில நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இத்தகவல் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியும் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் அதே கருத்தை வெளிப்படுத்தினார்.
உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பிறகு சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். சேலத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செம்மலை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.