நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில், திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை திமுக அரசின் நலத்திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்தார். அவர் பேசியதாவது “மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிற தமிழக முதல்வரின் வேட்பாளராக உங்கள் முன்னே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு சட்டமன்ற தேர்தலின் போது நமது முதல்வர் வாக்குறுதிகளைக் கொடுத்தார். சொன்ன வாக்குறுதிகளையும் செய்தார், சொல்லாதவற்றையும் செய்திருக்கிறார்”.
பிரதமர் மோடி என்ன செய்திருக்கிறார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம் என்றார். கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்றார். ரூ.400 இருந்த சிலிண்டர் 1000 ரூபாயாக விலை ஏறிப்போய் விட்டது. எல்லோரின் அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் போடுவேன் என்றார். 15 பைசா கூட போடவில்லை. பெட்ரோல், டீசல் விலைவாசியைக் குறைப்போம் என்றார், குறைக்கவில்லை, விலை தான் ஏறிப்போச்சு. வரியினை ஏற்றியதால் தாய்மார்கள் வாங்கும் தங்கம் 52 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மக்களிடம் வரியின் மூலமாக பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை கொடுக்கிறது மோடி அரசு. இந்த தேர்தலில் தான் அந்த அரசினைத் தூக்கி எரிய வேண்டியது முக்கியமானதாகும்.
நமது முதல்வரோ ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை செய்வேன் என்றார். செய்து கொண்டிருக்கிறார். மகளிர் உதவித்தொகை ரூ.1000 மாதம் தருவதாகச் சொன்னார், தந்து விட்டார். விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கவுள்ளார். கட்டணமில்லா பேருந்து பயணத்தை சாத்தியமாக்கியிருக்கிறார். நமது குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். பெண் குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் தந்திருக்கிறார். கொரோனா உதவி தந்திருக்கிறார். விவசாயக் கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்.
இந்தப் பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியாக மகளிர்குழு கடன் தொகை வட்டியில்லா கடனாக தரப்படும் என்றிருக்கிறார். மகளிர் குழு பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றிருக்கிறார். இப்படியாக எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் வாரி வழங்கியிருக்கிறார். வழங்கவும் உள்ளார். அவரின் வேட்பாளராக உங்கள் முன்னே உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஏற்கெனவே எனக்கு வாய்ப்பு அளித்திருந்தீர்கள். மீண்டும் மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.