தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் கூடலூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் அருண்குமார், போடி முன்னாள் எம்.எல்.ஏ. ராமராஜ் இல்ல திருமண விழாவில் பங்கேற்று நடத்தி வைப்பதற்காக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சேலத்திலிருந்து தேனிக்கு வந்தார்.
இந்த திருமண விழாவுக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்களான நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரது தலைமையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுகவினர் வரவேற்றனர். இதில் திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கண்ணன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, எடப்பாடி காலில் விழுந்து ஆசி பெற்றார். அதன்பின் தேனியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன், மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், முன்னாள் எம்.பி. பார்த்திபன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் வரவேற்றனர். இதில் செண்டை மேளங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி. ஆர், ஜெயலலிதா கனவை அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம். அனைவரும் ஒன்றிணைந்து ‘நம் வழி தனி வழி’ என்ற பாணியில் செயல்படுவோம்” என்று கூறினார். அதைத் தொடர்ந்து கம்பத்தில் நடைபெற்ற திருமணத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.