தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதனால் ஸ்டார் தொகுதியில் இந்த தொகுதியும் இருந்தது.இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்த கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் வாக்கிங், டாக்கிங் என்று இருக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எல்லா குறைகளும் சரியாகி விடும் என்று கூறிவருகிறார். இதற்கு முன்பு தமிழகத்தில் 5 முறை தி.மு.க. ஆட்சி செய்தது. மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது எந்த பணியையும் அவர் செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் எதை செய்தாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் . சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை. முதல்- அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்று கூறுகிறார். அவர் கனவு உலகில் நடந்து கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கைக்கோர்த்துக்கொண்டு தமிழகத்தில் சில பிரச்சினையை உருவாக்க நினைக்கிறார்கள். கோவில்களில் உள்ள சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அறநிலையத்துறை மூலம் மழைவேண்டி யாகம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதனால் வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு கடும் கோபம் வருகிறது. இதில் மக்களுக்கு நம்பிக்கை இருந்து, அதன்மூலம் மழை வந்தால் நல்லது தானே. நீங்கள் மழையில் இருந்தும், யாகத்தில் இருந்தும் சற்று ஒதுங்கி கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.