
ஆன்மீக நகரமான திருவண்ணாமலையை சுற்றி பல்வேறு ஆசிரமங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் பிரான்சிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த பெண் ஒருவர் டூரிஸ்ட் கைடால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆன்மீக நோக்கத்திற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்து தங்கி இருந்த நிலையில் தியானம் செய்தால் முக்தி கிடைக்கும் எனக்கூறி டூரிஸ்ட் கைடான வெங்கடேசன் என்பவர் தீபமலை பகுதியில் உள்ள கந்தாஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வெங்கடேசன் அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அங்கிருந்து வெளியேறி உள்ளார். தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் கொடுத்த புகார் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். பல்வேறு சுற்றுலா கைடுகளை அழைத்து வந்து விசாரணை நடத்தியதோடு, அணிவகுப்பும் நடத்தப்பட்டது. வெங்கடேசனை பாதிக்கப்பட்ட பிரான்ஸை சேர்ந்த பெண் அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து வெங்கடேசனை கைது செய்துள்ள போலீசார் அவரை தனி இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் தொல்லை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.