தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஈவிகேஎஸ். இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 66 ஆயிரத்து 675 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றியை இமாலய வெற்றியாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
காலையிலேயே அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறிவிட்டார். மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 10,804 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,301 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “39 லட்சம் மட்டும் செலவு பண்ணி இந்த தேர்தலை அணுகி இருந்தால் திமுக கூட்டணி காங்கிரஸ் காணாமல் போய் இருக்கும். நாம் தமிழர் கட்சி மக்களுக்காக நிற்கின்ற கட்சிதான். மக்களது வறுமையை பயன்படுத்தி பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விட்டார்கள். திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது என பாராட்டு விழா நடத்துவார்கள். கூடவே தேர்தல் ஆணையத்திற்கும் சேர்த்து பாராட்டு விழா நடத்துங்கள். ஏனென்றால் அவர்கள் இல்லை என்றால் இந்த வெற்றி சாத்தியப்பட்டு இருக்காது. ஒவ்வொரு முறையும் நாங்கள் புகார் கொடுக்க சென்றபோது அப்படியா என கேட்ட தேர்தல் ஆணையத்திற்கும் நிச்சயம் பாராட்டு விழா நடத்தணும்” என்றார்.