சட்டப்பேரவையில் 2022-23 நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் முடிந்த நிலையில் 24 ஆம் தேதியோடு நிறைவுபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக மீண்டும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை கூட இருக்கிறது. துறைவாரியாக எந்தெந்த தேதிகளில் மானிய கோரிக்கை மீதான விவாதங்களை நடத்துவது, கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக வரும் 30 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம் கலைஞரின் எண்ணப்படி தலைமைச் செயலக கட்டிடமாக மாற்ற ஏதேனும் யோசனைகள், முடிவுகள் இருக்கிறதா?' என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, ''உங்களுக்கே தெரியும் முதல்வர் எந்த விஷயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யமாட்டார். அதேபோல் ஒரு பிரச்சனையை எடுத்து வீம்புக்காக செயல்படுவதோ அவருடைய நோக்கம் அல்ல. சட்டமன்றத்திலேயே தெளிவாக நீங்கள் கவனித்திருப்பீர்கள். யாரையும் தன்னை புகழ்ந்து பேசவிட்டு ரசிக்கமாட்டார். அதேபோல் எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சனம் செய்யவிட்டு அதையும் கை தட்டிக்கொண்டோ அல்லது கை கட்டிக்கொண்டோ பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். இந்த விஷயத்தில் தீர ஆராய்ந்து கலந்து பேசி சரியான முடிவினை தமிழக முதல்வர் எடுப்பார்'' என்றார்.