திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் அண்ணா சிலை அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. முக்கிய நிர்வாகிகள் சிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர். பின்னர் இச்சம்பவம் குறித்து முசிறி நகராட்சியில் 22 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மகேஸ்வரியின் கணவர் நந்தினி சரவணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது, “முசிறி நகராட்சியில் 24 வார்டுகளிலும் அதிமுக போட்டியிட்டது. போலீஸ் அறிக்கையில் 16 வார்டுகள் அதிமுகவிற்கு சாதகமாக இருப்பதாக தகவல் தெரிந்தது. அதனடிப்படையில் முன்னாள் மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பிரின்ஸ் எம். தங்கவேல், முன்னாள் தொட்டியம் ஒன்றிய பெருந்தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு 12 வேட்பாளர்களை தோற்கடித்து விட்டனர். இதையும் மீறி 4 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் கழகத்தை காட்டிக்கொடுத்த துரோகிகளை கட்சியிலிருந்து அப்புறப்படுத்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மாவட்ட செயலாளர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து துரோகிகள் இடமிருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும். வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வழிவகை செய்ய வேண்டும்” என பேசினார். அப்போது தோல்வியடைந்த வேட்பாளர் மைக்கேல் ராஜ், ஆனந்தன், சத்யராஜ் வேட்பாளர்களின் கணவர்கள் பாரதிராஜா, ராஜேந்திரன் வேட்பாளரின் மகன் சுப்பராய கார்த்திக் உள்ளிட்ட பலர் இருந்தனர்.