நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் தனது பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மிகவும் நொந்து போய் இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் படத்தை மட்டும் பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். படத்தை ஸ்டாம்ப் ஸைசில் வைத்துக் கொண்டிருக்கிறார். இது போன்று வேறு யாராவது வைத்திருந்தால் கூட பரவாயில்லை. எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தியும், அதிமுக கொடியை பிடித்துக் கொண்டு எம்.ஜி. ஆரை சிறுமைப்படுத்துவது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று ஆகும். ஒவ்வொரு எம்.ஜி.ஆர் ரசிகரும் வேதனையோடும், கொதிப்போடும் இருக்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் விருப்பமனு கொடுக்கப்பட்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் போட்டியிட அனுமதிக்கவில்லை. இவ்வாறு கட்சி தலைமையே கட்சியை அழிக்கும் வேதனைக்குரிய செய்தியை அறிந்த பின்னரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பதவியில் இருந்து என்ன பயன்” எனத் தெரிவித்தார்.