திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (19-07-2018) , சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதன் முழு விவரம்:
செய்தியாளர்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஸ்டாலின்: இதுகுறித்து நான் ஏற்கனவே தெளிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். பிரதமர் மோடி அவர்கள், என்னென்ன வாக்குறுதிகள் எல்லாம் தந்து ஆட்சிக்கு வந்தாரோ, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற நிலையிலிருந்து அவர் பின்வாங்கி இருப்பதும், தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பல்வேறு நன்மைகள், திட்டங்களையெல்லாம் பறிக்கின்ற நிலையிலும், குறிப்பாக, மாநில உரிமைகளே பறிபோகின்ற அளவுக்கு இன்றைக்கு மத்தியில் இருக்கின்ற ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, தற்போது மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிற சூழலில் அதற்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு அளிக்கலாம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது.
செய்தியாளர்: தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. இப்போதுகூட 17 பேர் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்கள், இதற்கெல்லாம் எப்போது ஒரு முடிவு வரும்?
ஸ்டாலின்: கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் மட்டுமல்ல, எங்கள் சட்டமன்ற துணைத் தலைவர் அவர்கள் கூட, ஆதாரங்களோடு என்னென்ன படுகொலை மற்றும் எத்தனை பாலியல் பலாத்காரங்கள் தமிழகத்தில் நடந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்து சொன்னோம். ஆனால், இதற்கு முதலமைச்சர் பதில் சொல்லுகிறபோது, எதுவும் நடக்காதது போல, “பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு விட்டதைப் போல” தொடர்ந்து அவர் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு இவைகளெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.
செய்தியாளர்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகக்கூடிய சாட்சிகளுக்கு, வழக்கறிஞர்கள் மூலமாக மிரட்டல் விடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறதே?
ஸ்டாலின்: அது மட்டுமா நடந்து கொண்டிருக்கிறது? தீர்ப்பளித்த நீதிபதி சுந்தர் அவர்களைக் கூட மிரட்டக்கூடிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, இவையெல்லாம் தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற ஆட்சியிலே சகஜமாக, “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக“தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன செய்தி தான், ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
செய்தியாளர்: நேற்று முதலமைச்சர் கோவையில் செய்தியாளர்களை சந்திக்கும்போது, டெண்டர் விட்டதில் எவ்வித முறைகேடும், ஊழலும் நடைபெறவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்?
ஸ்டாலின்: முதலமைச்சருக்கு தமிழகம் முழுவதும் உறவினர்கள் இருக்கிறார்கள் என்றால், தமிழகம் முழுவதும் அடிக்கின்ற கொள்ளைகளுக்கு ஆட்கள் இருப்பதாக முதலமைச்சர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். என் கையில் புள்ளி விவரங்களுடன் உள்ள ஆதாரத்துடன் சொல்லுகிறேன். அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நடந்த நேரத்தில் 22.04.2016 அன்று இந்த ஆட்சிக்கும் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் தொடர்புடைய கரூர் அன்புநாதன் அவருடைய வீட்டில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு 4.77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அது நடந்து முடிந்து 27 மாதங்கள் ஆகி விட்டது. அதேபோல், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மேயராக இருந்த சைதை துரைசாமி, அவருடைய மகன் வெற்றி துரைசாமி ஆகியோர் இல்லத்தில் 12.09.2016 அன்று ரெய்டு நடந்தது. அதுவும் முடிந்து 22 மாதங்கள் ஆகி விட்டது. அதன் பிறகு ஓ.பி.எஸ் இன் நெருங்கிய நண்பர் மணல் மாபியா சேகர் ரெட்டி வீட்டில் 09.12.2016 அன்று ஒரு மிகப்பெரிய ரெய்டு நடந்தது. அது நடந்து முடிந்து 19 மாதங்கள் ஆகி விட்டது. அதேமாதிரி முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ், அவருடைய வீட்டில், அலுவலகத்தில் மட்டும் அல்லாமல், அவருடைய மகன் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கோட்டைக்கே சென்று சோதனைகள் நடத்தப்பட்டது. அவை முடிந்து 19 மாதங்கள் ஆகிவிட்டன.
அதாவது 21-12-2016 அன்று அந்த சோதனைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு 12-04-2017 ஆர்.கே நகர் இடைத்தேர்தலையொட்டி 32 இடங்களில் அமைச்சராக இருக்கக்கூடிய குட்கா புகழ் விஜயபாஸ்கர் அவருடைய வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், நண்பர்கள், எங்கெங்கு தொழில் நடத்திக்கொண்டு இருக்கிறாரோ அந்த இடங்களை எல்லாம் சேர்த்து 32 இடங்களில் நடந்தது. குவாரியில் மட்டுமே 300 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 89 கோடி ரூபாய்க்கு வருமான வரித்துறைத்துறை பட்டியலே அறிவித்தது. அதில், முதலமைச்சருக்கு எத்தனை கோடி? அதற்கு கீழே இருக்கக்கூடிய 12 / 13 அமைச்சர்களுக்கு எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வருமானவரித்துறை ஆதாரத்தோடு பட்டியல் வெளியிட்டது. அவையெல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை? எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லெட்சுமி வீட்டில், அலுவலகத்தில் சோதனை நடந்து முடிந்து 15 மாதங்கள் ஆகிவிட்டன. அதுமட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் சசிகலா, சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவருடைய உறவினர்களின் இல்லங்களில் சுமார் 1,800 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டார்கள். அது முடிந்து 8 மாதம் ஆகிவிட்டது.
முன்னாள் முதலமைச்சர் மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டம் வீட்டில் 17-11-2017 அன்று நடந்த மிகப்பெரிய சோதனை முடிந்து 8 மாதம் ஆகிவிட்டது. இதுபோன்ற வருவரித்துறை சோதனைகள் எல்லாம் நடந்து முடிந்த பின்பு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்ன வழக்கு தொடர்ந்துள்ளார்கள்? சார்ஜ் சீட் ஆவது பைல் பண்ணியிருக்கிறார்களா? என்று பார்த்தால் இல்லை.
அதுபோல், இப்பொழுது நான்கு, ஐந்து நாட்களாக எடப்பாடி அவர்களின் சம்பந்தி மற்றும் அவரது பார்ட்னர் வீடுகளில் அலுவலகங்களில் தொடர்ந்து சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில், 180 கோடி ரூபாய், 100 கிலோ தங்கம் இவையெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கார்களிலேயே கோடிக்கணக்கான பணம் இன்னும் சுற்றிக்கொண்டு இருக்கின்றது. இன்றுவரை விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மூடி மறைக்க, இதைப்பற்றி எல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாத நிலையிலே, சாதாரணமாக நடக்கின்ற காரியம் போல முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து, முதலமைச்சர் என்ன விளக்கம் சொல்லுகிறார்? என்பதை தான் நான் எதிர்நோக்கி காத்திருக்கின்றேன்.
செய்தியாளர்: தமிழக ஆளுநர் நாளை மீண்டும் ஆய்வு செய்யப்போகிறார் அதுபற்றி உங்கள் கருத்து?
ஸ்டாலின்: நானும் அவருடைய நிகழ்ச்சி நிரல் குறித்த பட்டியலை பார்த்தேன். அந்த நிகழ்ச்சி நிரல் பட்டியலில் ஆய்வு செய்வதாக இல்லை. சில நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய நிலையில்தான் அவருடைய சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆளுநர் ஆய்வு செய்கிற நிலையில் இருந்தால் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி தொடர்ந்து, அதை கண்டித்து, கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறதோ, அதை தொடர்ந்து செய்யும், அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதுமட்டுமல்ல, நான்கு நாட்களாக நடந்து கொண்டிருக்கக்கூடிய ரெய்டு விவகாரங்கள், முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியினுடைய உறவினர்கள் மற்றும் முதல்வரே முழுமையாக இதில் சம்மந்தப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து, நாங்கள் ஒரு மனுவை தயாரித்து அதனை கவர்னரிடத்தில் வழங்குவதற்கு நேரம் கேட்டிருந்தோம், அவரும் வருகிற திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நேரம் கொடுத்திருக்கிறார். எனவே, முறையாக கவர்னரிடத்திலே தந்துவிட்டு அதன்பிறகு நிச்சயமாக, உறுதியாக இதுகுறித்து நாங்கள் நீதிமன்றத்தையும் நாடவிருக்கிறோம்.
செய்தியாளர்: தி.மு.க மீதான 2 ஜி வழக்கில் சி.பி.ஐ யும், மத்திய அமலாக்கப்பிரிவும் தீவிரமாக செயல்பட்டார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் வருமானவரித்துறை செயல்பாடுகளில் உள்நோக்கம் இருக்கிறது என நினைக்கிறீர்களா?
ஸ்டாலின்: இந்த விவகாரங்களில் மத்திய அரசு சுணக்கம் காட்டுகிறது. ஏதோ திட்டமிட்டு ஒரு நோக்கத்திற்காக இந்த ரெய்டுகள் எல்லாம் நடக்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது, அதனைப் போக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பது தான் என்னுடைய கருத்து.
செய்தியாளர்: 8 வழிச்சாலையை ரஜினிகாந்தும், தமிழிசையும் ஆதரிக்கிறார்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
ஸ்டாலின்: மத்திய அரசு கொண்டுவரக்கூடிய எல்லா திட்டங்களையும் ரஜினிகாந்த் வரவேற்பது உங்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அது ஆச்சரியமாக இல்லை. ஆகவே, அவர் தொடர்ந்து அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தி.மு.கவை பொறுத்த வரைக்கும் தன்னுடைய கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறது. மாற்றுவழி அல்லது அங்கிருக்ககூடிய மக்களை சந்தித்து சமாதானம் செய்து விட்டு அவர்களின் முழு சம்மதத்தோடு நிறைவேற்ற வேண்டும். இல்லையென்று சொன்னால், நிபுணர் குழு அமைத்து ஒரு மாற்று வழியை கண்டுபிடித்து அதன் மூலமாக நிறைவேற்ற வேண்டுமென்று தி.மு.க தன்னுடைய கருத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறது. அதைதான், நான் இப்பொழுதும் சொல்லுகிறேன்.