போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் திமுக வேட்பாளருமான செந்தில்பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் செந்தில்பாலாஜி உள்பட 47 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை இரு நாட்களுக்கு தாக்கல் செய்தது சென்னை காவல்துறை.
இந்த குற்றப்பத்திரிகையில் தமிழக அரசின் செய்தித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இருவரின் பெயர்களும் இருக்கின்றன. இதுகுறித்து விசாரித்தபோது, “செந்தில்பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் சேலம் போக்குவரத்துப் பிரிவில் இணை இயக்குநராக இருக்கும் எம்.வெற்றிச்செல்வன் 10-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். 11-வது குற்றவாளியாக டெபுடி டைரக்டர் ராஜா.
தற்போது விடுமுறையில் இருக்கும் வெற்றிச்செல்வனை செய்தித்துறையில் உள்ள கள விளம்பரப் பிரிவில் இணை இயக்குநராக நியமிக்கக் கோப்புகள் தயாராகி வருகிறது. அவருக்காகக் கோட்டையிலுள்ள முக்கிய அதிகாரிகள் சிலர் முயற்சி எடுத்துள்ளனர். அரசு அதிகாரி ஒருவரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், உடனடியாக துறை ரீதியிலான முதல் கட்ட நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த வழக்கில் குறைந்தபட்ச அந்த நடவடிக்கைகூட எடுக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது” என்கிறார்கள் கோட்டையிலுள்ள அதிகாரிகள்.
செந்தில்பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் சிக்கியுள்ள செய்தித்துறை அதிகாரிகள் விவகாரம் தான், தேர்தல் பணிகளுக்கு மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்படும் தலைமைச் செயலகத்தின் ஹாட் டாபிக்!